தமிழக செய்திகள்

மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

கடந்த ஆண்டு டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு இதேபோன்றதொரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

மதுரை

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உஷாரான போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு குழுக்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், மோப்ப நாய் குழுவுடன் சென்று கலெக்டர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். அவர்கள் பழைய கட்டிடம், கூடுதல் கட்டிட வளாகம், ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்தனர்.

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த மக்கள் பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின்னர் ஒவ்வொரு பகுதியிலும் அமைந்த அறைகளின் உள்ளே, கலெக்டர் வளாகம் என முழு அளவில் சோதனை நடந்தது.

இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு இதேபோன்றதொரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. எனினும், நீண்ட சோதனைக்கு பின்னர் அது புரளி என தெரிய வந்தது.