கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை நல்கிய பிரதமருக்கு நன்றி - நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்றைய தினம், நம் தூங்காநகரமான மதுரைக்கு வந்துள்ள நமது பாரதப் பிரதமர் மோடி தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ரூ.4,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஐந்து முக்கிய திட்டங்களை அர்பணித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

1. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் இடையிலான பயணத்தை எளிதாக்கி, சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம் பரமக்குடி-ராமநாதபுரம் சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துதல்

2. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான பயண நேரத்தைப் பாதியாகக் குறைக்கும் விதமாக நான்கு வழிச்சாலை

3. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிப்புத்தூர், பொள்ளாச்சி, காரைக்குடி உள்ளிட்ட 8 மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையங்கள்

4. நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரையிலான நான்காவது ரெயில் பாதை

5. 24×7 நேரமும் பண்பலை ஒலிபரப்பை உறுதி செய்யும் வகையில், கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் 3 புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள்

எனத் தமிழகத்திற்குப் பல சிறப்பான திட்டங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2014 முதல் இன்று வரை நமது மத்திய அரசு நல்கிய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வெறும் தொடக்கப் புள்ளியே! இன்னும் இரண்டே மாதங்களில் தமிழகத்தில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக திட்டங்களை மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வீறுநடையிடச் செய்யும்! இது நிச்சயம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.