சாலை மறியல்
குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக தே.மு.தி.க.வை சேர்ந்த கே.ஆர்.உமாபதி உள்ளார். சீவூர் ஊராட்சியின் 4-வது வார்டான கள்ளூர் அடுத்த குறிஞ்சிநகர், முல்லைநகர், ராயல்நகர், பாபாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சரியானபடி குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை எனவும், கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கிருப்பதாகவும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தியும், மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளில் புகுவதை தடுக்க வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் கூறி உள்ளனர்.
ஆனால் அவர் அதனை அலட்சியப்படுத்துவதாகவும், அதனை கண்டித்தும் நேற்று காலையில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென குடியாத்தம்-பலமநேர் சாலையில் கள்ளூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.