தமிழக செய்திகள்

39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கடந்த 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

தினத்தந்தி

காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளின் சார்பில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூகநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். கறம்பக்குடி வர்த்தக சங்கம், வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

முடிவுக்கு வந்தது

இதையடுத்து மருத்துவமனைக்கு தற்காலிகமாக கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் போராட்டம் கைவிடப்படவில்லை. அரசு அதிகாரிகள், திருநாவுக்கரசர் எம்.பி., சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கடந்த 39 நாட்களாக போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் போராட்ட குழுவினருடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்து தருவதாக தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ள தகவலை தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதைதொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர். இதனால் கடந்த 39 நாட்களாக கறம்பக்குடியில் நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு