தூத்துக்குடி,
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.
இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணி தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் நடத்தினர். மறுநாள் தங்களது கிராமத்தில் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மாணவர்களை திரட்டி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.
அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். 46வது நாளான நேற்று அரசு விடுமுறை என்பதால் நேற்றைய போராட்டத்தில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்த ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல்வேறு போராட் டங்கள் நடந்து வரும் நிலையில் பராமரிப்பு பணியை காரணம் காட்டி 15 நாட்கள் மூடப்பட்டிருப்பது ஆலைக்கு எதிரான போராட்ட வேகத்தை குறைக்கும் செயல் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் 47வது நாளாக இன்று நடந்தது.
இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக அங்கேயே சமையல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டவாறு போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் அந்த பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி போராட்ட குழுவினருக்கு வெளியில் இருந்து சுத்திரிக்கப்பட்ட குடிநீர் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டது.