தமிழக செய்திகள்

அ.தி.மு.க., தி.மு.க.வை விரட்டி அடிக்கும்: ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அர்ஜூன் சம்பத் பேட்டி

இந்து மக்கள் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் 108 நாட்கள் நடைபெறும் ஆன்மிக அரசியல் பிரசார யாத்திரை தொடக்க விழா, சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு நடைபெற்றது.

தாம்பரம்,

பிரசார யாத்திரையை இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத அரசியல் ஆன்மிக அணியை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையை கால் ஊன்ற செய்வதற்காகவும் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த பிரசார யாத்திரை நடைபெறுகிறது.

சர்கார் பட பேனர்களை கிழித்ததற்கு எதிராக நடிகர் விஜய்க்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்தது இயல்பானது. அவரது வழி, தனி வழி. 234 தொகுதியிலும் காவி கொடி பறக்கும். ரஜினிகாந்த் தமிழக முதல்-அமைச்சர் ஆவார். முழுமையான ஆன்மிக அரசியல் என்று கூறியதால் அவருக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.

ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அ.தி.மு.க., தி.மு.க.வை விரட்டி அடிக்கும். சந்திரபாபு நாயுடு-மு.க.ஸ்டாலின் சந்திப்பு இந்திய அளவில் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.