திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து நேற்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மன்னார்குடி பெரியார் சிலை அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கஜா புயல், கொரோனா காலக்கட்டத்தில் மக்களோடு, மக்களாக நின்று பணியாற்றியவர் டி.ஆர்.பி. ராஜா. தொழில் வளர்ச்சியில், நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உயர்ந்ததற்கு டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சிதான் காரணம். தமிழகம் முழுக்க தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர் டி.ஆர்.பி. ராஜா. இவரை இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர்ந்தால் நான்கு முழம் கயிற்றில் தொங்கி விடுவேன் என்றார் ஒருவர். பழனிசாமியை டயர் நக்கி என விமர்சனம் செய்தவர் மற்றொருவர். தேர்தலுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதற்காக ஒருவர் கூட்டணி அமைத்துள்ளார். இப்படிப்பட்ட துரோக கூட்டம் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல், தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையே தான் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை ஜெயலலிதாவின் காலை பிடித்தார், அதன் பின்னர் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரின் காலை பிடித்தார். தற்போது பிரதமர் மோடியின் காலை பிடித்துக் கொண்டிருக்கிறார். இதைத்தான் நான் முரட்டு அடிமை என்று கூறுகிறேன். எனக்கு அனுபவம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எனக்கு இது போன்று அடிமையாக இருந்த அனுபவம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
காலில் விழுவது தவறில்லை, ஆனால் சசிகலாவின் காலையே வாரிவிட்டார். இதைத்தான் நான் கூறி வருகிறேன். சசிகலாவும் நான் சொன்னது சரிதான் என்று கூறுகிறார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான விடியல் பஸ் திட்டத்தில் கையெழுத்திட்டார். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயன்றபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 6.30 மணிக்கே ரூ.5 ஆயிரத்தை மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இந்த தேர்தலுக்கு பின்னர் அமைய உள்ள தி.மு.க. ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளது, ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட உள்ளன. நீங்கள் நினைப்பதைப் போல் மீண்டும் அமைய உள்ள தி.மு.க. ஆட்சியில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக வருவார். அதன் பிறகு அவர் மன்னார்குடி தொகுதிக்காக கொடுத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.