சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன் (ஆத்தூர் தொகுதி) பேசினார்.
சபாநாயகரிடம் கூடுதல் நேரத்திற்கு அனுமதி கேட்டு அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்ததால், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை பதிலுரை வழங்க சபாநாயகர் மு.அப்பாவு அழைத்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, சில கருத்துக்களைக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி தனது பதிலுரையைத் தொடங்கினார்.
அதன் பின்னர் அவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு அமைப்புகளைக் கலைப்பதற்காகக் கொண்டு வந்த சட்ட முன்வடிவை கண்டிக்கின்றோம். அதோடு கூட்டுறவு அமைப்புகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருந்தது. இதனை 3 ஆண்டுகளாகக் குறைத்திருக்கிறார்கள். வேண்டுமென்றே அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு அமைப்பு தேர்தலைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றோம். அதோடு அமைச்சர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு நடந்துள்ளதாகச் சொல்லியுள்ளார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றால், அந்த சட்டத்திட்ட விதிகளின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநடப்பு ஏன்?
ஆனால், பொத்தாம் பொதுவாக தி.மு.க. அரசு ஒட்டுமொத்தமாகக் கூட்டுறவுச் சங்கங்களைக் கலைத்து, தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை இந்த கூட்டுறவுச் சங்கங்களில் இடம் பெறச் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த கூட்டுறவுச் சங்கங்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்த சட்டமுன்வடிவை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதனைக் கண்டித்தும், அதோடு சட்டமன்றத்திலே பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அ.தி.மு.க. அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு போதிய நேரம் ஒதுக்கி தருவதில்லை. அதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒருதலைபட்சமாக செயல்படுகிறாரா?
இதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரை பொறுத்தவரையில் நடுநிலைமையோடு செயல்படவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆகவே இதனை அவர் செயல்படுத்தவேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் என்று செயல்படுவது ஏற்புடையதல்ல. ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பதுபோல, ஆளும் கட்சி ஒரு பக்கம், எதிர்க்கட்சி ஒரு பக்கம். இரண்டும் சரியாக இருந்தால்தான் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நன்மை முழுமையாகக் கிடைக்கும் என்றார்.