சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். அப்போது, அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.
மேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் கவர்னர் வெளியிடுவார். இது வழக்கமான நிகழ்வாகும்.
அதுபோல தமிழக சட்டசபையின் 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜனவரி மாதம் கூடவுள்ளது. இந்த கூட்டத் தொடர் 18-ந் தேதிக்கு மேல் கூட்டப்படலாம் என்று சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் தேதியை முடிவு செய்ய கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கோப்பில் இன்னும் அவர் கையெழுத்திடவில்லை என்றும் அந்த கோப்பு அரசுக்கு வந்த பிறகுதான் தேதி உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டத் தொடர், 3 நாட்கள் நடக்க இருப்பதாக தெரிய வருகிறது. இந்த சட்டசபை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் அல்லது சட்டசபை மைய மண்டபத்தில் கூட்டப்படுமா என்பதும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் இரண்டு இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகாத சூழ்நிலையில் ஒருவர் மீது ஒருவர் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தேர்தலை முன்னிட்டு கூறப்படும் அரசியல் ரீதியான விமர்சனங்களை கேட்க முடியும். எனவே இந்த கூட்டத் தொடர் பரபரப்புடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.