சென்னை,
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். முதல்-அமைச்சர் பற்றியும் பேசி இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- எதற்கும் ஒரு எல்லை, வரையறை உண்டு. அந்த வரையறை சட்டத்துக்கு உட்பட்டது. வரையறையை யார் தாண்டினாலும், சட்டத்தை மீறியவர்களாக தான் கருதப்படுவார்கள். சட்டத்தை மீறிய உரையாக, பேச்சாக யார் பேசினாலும் அவர்கள் மீது உறுதியாக ஜெயலலிதா அரசு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளும்.
எனவே கருணாஸ் பேச்சு, முதல்-அமைச்சர் கவனத்துக்கு சென்று இருக்கிறது. அவர் பேசியது சட்டத்துக்கு புறம்பானது என்ற வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வரையறை இல்லாமல் பேசுவது பண்பாடற்ற செயல். மனித பண்புகள் இல்லாத ஒருவரை மனிதனாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற பேச்சுக்களை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியாது. கருணாஸ் பேசிய பேச்சுக்கான பலனை அவர் அனுபவித்து தான் ஆகவேண்டும்.
கேள்வி:- தற்போது நடக்கும் ஆட்சி நீடிப்பதற்கு அவர் தான் காரணம் என்று கருணாஸ் கூறி இருக்கிறாரே? கூவத்தூர் சொகுசு விடுதியை அவர் தான் கண்டுபிடித்து எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்ததாகவும் கூறியுள்ளாரே?
பதில்:- ஜெயலலிதா அரசு அமைய காரணம் நான் தான் என்று கருணாஸ் சொல்வது எள்ளி நகையாடக்கூடிய நகைச்சுவை. கூவத்தூரை கண்டுபிடித்தவர் என்றால், கூவத்தில் அவர் குளித்தவர் என்று நான் நினைக்கிறேன். அதை மனதில் வைத்து சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா அரசு தொடர நாங்கள் அன்று ஒற்றுமையாக இருந்தோம். அதில் இவரோட பங்கு என்ன?
கேள்வி:- எச்.ராஜா, கருணாஸ் என்று தொடர்ச்சியாக அரசையும், போலீசாரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?
பதில்:- சட்டத்தின் முன் எல்லோரும் சமம். தொடர்ந்து உள்ளே போவார்கள். வழக்கு போட்ட பிறகு நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அதில் பாரபட்சம் கிடையாது.
கேள்வி:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இப்படி இருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமானவர்கள் தி.மு.க. தான் என்று மீண்டும் பிரச்சினை எழுப்ப என்ன காரணம்?
பதில்:- இதை சாதாரண விஷயமாக எடுத்து கொள்ளக்கூடாது. நம்முடைய தொப்புள்கொடி உறவுகள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதற்கு யார் யாரெல்லாம் காரணம்? அன்றைக்கு ஆட்சியில் இருந்த தி.மு.க., காங்கிரசை போர்க் குற்றவாளிகளாக சேர்த்து தண்டனை வாங்கி தருவதன் மூலம் தான் இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். ராஜபக்சே வாக்குமூலத்தை சாதாரணமாக எடுக்கக்கூடாது. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் இதுகுறித்து எதிர்க் கட்சிகள் ஏன் வாய் திறக்கவில்லை? இவ்வாறு அவர் பதில் அளித்தார்.