சென்னை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கூடங்குளம் அணு உலை வளாகத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைக்க ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் உள்ள அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகளை சேமித்து வைக்க, ஆழ்நில அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், மென்மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவுகளை வைப்பது பிரச்சினைக்குரியது என்று சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த போதும், ஆழ்நில அணுக்கழிவு மையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த அவகாசத்தை தாண்டியும் அதனை அமைக்க முயற்சிகளை மேற்கொள்ளாமல், மென்மேலும் கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே தற்காலிக அணுக் கழிவு மையத்தை அமைப்பது தமிழகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.
அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் `ஆழ்நிலை கருவூலம்' (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில், அணு உலைக்கு வெளியில் (Away From Reactor) தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் அணு உலைகளை இயக்கி அணுக்கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய ஆபத்தான விசயமாகும்.
ஆழ்நில அணுக்கழிவு சேமிப்பு மையத்தில் அல்லாது அணு உலை வளாகத்தில் உள்ள அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே உறங்கிக் கொண்டிருக்கும். இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் அது விழித்துக்கொள்ளும். அப்போது நேரும் துயரங்கள் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும். அதற்கான பலனை செர்னோபில், புகுஷிமா போன்ற அணு உலை விபத்து மூலம் அந்த நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்கு பிறகும் இன்னும் அங்கு அணு சக்தி வல்லுநர்களால் கூட கண்டறியப்பட முடியாத அளவுக்கு கதிர்வீச்சு அபாயம் மிகமோசமானதாக இருப்பதற்கு காரணம் அங்குள்ள அணுக்கழிவு மையத்திலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளே காரணம் என கூறப்படுகிறது. இதன் தாக்கம் பல ஆயிரம் கிலோமீட்டர் வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வசிக்க முடியாத, உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டது புகுஷிமா நகரம்.
அதேபோல், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள முதல் நிலத்தடி அணுக்கழிவுக் கிடங்கை சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் பகுதிகளில் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.
மேற்க்கண்ட இந்த சம்பவங்கள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன. இதுபோன்ற ஆபத்துக்களை உணர்ந்தே உலக நாடுகள் பலவும், குறிப்பாக அணு உலை திட்டங்களை செயல்படுத்தி வந்த நாடுகள் கூட அணுஉலை திட்டத்தை படிப்படியாக குறைந்து வருகின்றன. ஆனால் இந்திய அரசோ குடிமக்களின் நலனைப்பற்றி கருத்தில்கொள்ளாமல் அதுதொடர்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் தமிழகத்தை மட்டும் குறிவைத்து செயல்படுத்தி வருகின்றது.
அணுஉலை கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்றும், அணுக் கழிவு மையத்தை அமைக்கும் தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அணுமின் சக்தி கழகம் வெளிப்படையாக தெரிவித்த போதும், கூடங்குளத்தில் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாத அணு உலைகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவது ஏற்புடையதல்ல.
அணுக்கழிவு மையத்தை கர்நாடகா மாநிலம் கோலார் சுரங்கத்தில் அமைக்கவிருப்பதாக இந்திய அணுசக்திக்கழகம் தெரிவித்தபோது, அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக இரண்டு நாட்களில் அந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட்டது. கர்நாடகா மாநில பாஜக அரசு கர்நாடகாவில் அணு திட்டங்களுக்கு எங்கும் அனுமதி கிடையாது என தெரிவித்தது. குஜராத்திலும், மஹாராஷ்டிராவிலும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அங்கு மேற்கொள்ளவிருந்த அணு உலை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் பெரும் மக்கள் எதிர்ப்பு வந்தபோதிலும் ஆளும் அரசுகள் சர்வாதிகாரப் போக்கில் அதனை கண்டுகொள்ளாது தொடர் அழிவுத்திட்டங்களை திணிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. மக்கள் கோரிக்கைகளை ஏற்பதில் கூட மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது.
அணுக்கழிவு மையத்தால் மிக சமீபமாக பெரும் பாதிப்புகளை சந்தித்த உலக நாடுகளின் நிலையை அறிந்திருந்தும் இத்தகைய விஷப்பரிட்சையை தமிழகத்தில் செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிடுவதை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. சோதனை எலிகளாகத் தமிழக மக்களை மாற்றும் இந்த விபரீதமான விஷயத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
ஆகவே, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இந்தியாவில் நிரந்தர ஆழ்நில அணுக்கழிவு மையம் அமைக்கும் வரையில், கூடங்குளத்தில் செயல்பாட்டில் உள்ள இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி அணுக்கழிவு சேர்வதை நிறுத்த வேண்டும். மேலும், மேற்கொண்டு நான்கு அணு உலைகள் கட்டுமானத்தையும் கைவிடவேண்டும். அதோடு தற்போது ஒன்றிய அரசு அனுமதித்துள்ள ஆபத்து நிறைந்த அணுக்கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமிக்கும் திட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.