சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்துக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது.
தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தையும், பன்முகத் தன்மையையும் குலைக்கின்ற வகையில் நடத்தப்படும் ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்த காரணத்தால், முன்கூட்டியே இன்று (நேற்று) காலையில் அவர்களை இந்த அரசு கைது செய்திருக்கின்றது. அதுமட்டுமின்றி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு போட்டு இருக்கிறார்.
ஆனால், ரத யாத்திரை நடத்துபவர்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பினை அளித்து, முறைப்படி அனுமதிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடும் இந்த அரசை நாங்கள் கண்டிக்கிறோம்.
இதுபற்றி, நாங்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய நேரத்தில், பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, எங்களுக்கு முறையான பதில் தரவில்லை. எனவே, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் முழக்கமிட்டோம். முதல்-அமைச்சரின் பதிலில் எங்களுக்கு திருப்தியில்லை என்பதால், தொடர்ந்து பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கேட்டோம். இது பா.ஜ.க. ஆட்சியா? அல்லது அ.தி.மு.க. ஆட்சியா? என்ற நிலையில் தொடர்ந்து எங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தோம்.
ஆனால், சபாநாயகர் எங்கள் அனைவரையும் காவலர்களை விட்டு வெளியேற்றினார். எனவே, கோட்டைக்கு முன்னால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு.
கேள்வி:- நீங்கள் அவையில் பேசிய அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்களே?.
பதில்:- பா.ஜ.க.வுக்கு இங்கு இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி எந்தளவுக்கு ஜால்ரா போடுகிறார்கள், துதி பாடுகிறார்கள், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம், இதில் இருந்து நீங்களே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் செய்யும் துரோகச் செயல்களுக்கு இதுவே சாட்சி.
கேள்வி:- தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியா?, அ.தி.மு.க. ஆட்சியா? என்று நீங்கள் கேட்டது கண்டனத்துக்கு உரியது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறாரே?.
பதில்:- அவர் பேசுவது அவரது உரிமை. இந்த ஆட்சி பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடும் ஆட்சி என்பதை இன்று தெளிவாக நிரூபித்து இருக்கிறோம்.
கேள்வி:- மற்ற மாநிலங்களில் ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்திருக்கும்போது இங்கு மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?.
பதில்:- அங்கெல்லாம் தந்தை பெரியார் பிறக்கவில்லை. இந்த மாநிலத்தில் தான் அவர் பிறந்தார். அந்த உணர்வுடன் தான் பேரறிஞர் அண்ணா எங்களை உருவாக்கி இருக்கிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.