தஞ்சாவூர்,
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவபடத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு புறப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் அமைச்சருக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்தடைந்தது. அமைச்சர் துரைக்கண்ணுவின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் தஞ்சை ராஜகிரியில் உள்ள தோட்டத்தில், 63 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் கொரோனாவால் உயிரிழந்ததால் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் முறையாக பின்பற்றப்பட்டது.