கரூர்,
கரூரில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டில் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என முதல்-அமைச்சர் கூறுவது அவரது பயத்தை காட்டுகிறது. இதை வைத்து பார்க்கும்போது அதில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்ற சந்தேகம் எழுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி மீண்டும் மாபெரும் வெற்றி பெறுவார். நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏக்கள் உரிய முடிவு எடுத்து சட்டரீதியாக சந்திப்பார்கள்.
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு வந்து இணையுங்கள் என கூறியதில் இருந்தே அவர்கள் வலிமையை இழப்பது புலப்படுகிறது. மேலும் இது காலம் கடந்த ஞானோதயம் ஆகும்.
90 சதவீதத்திற்கு மேலான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பருவமழை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை நடத்தவிடாமல் இருப்பதில் இருந்து அ.தி.மு.க. செல்வாக்கு சரிவை சந்திப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. அவர்கள் வழக்கில் ஜெயித்தால் ஆட்சிக்கு முடிவு வந்துவிடும் என எதிர்பார்த்தனர். அது நடக்காதது எங்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமோ, அதைவிட அதிகமாக மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணருகிறோம். மேல்முறையீட்டிற்கு செல்ல 3 மாத கால அவகாசம் இருக்கிறது. தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு தீவிர ஆலோசனைக்கு பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.