ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 பேர் படுகாயம்
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் சொக்கநாதன்புத்தூரில் இருந்து தளவாய்புரம் செல்லும் சாலையில் தேவி ஆற்றுப்பாலம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.
அப்போது முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர் வழியாக கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த கார் நிலை தடுமாறி வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் வடகாசி, கருப்பாயி, மாரியம்மாள், காளியம்மாள், மூக்கம்மாள், காளியம்மாள் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கார் டிரைவர் தங்கராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் புளியங்குடியை சேர்ந்த தோப்பு மணி என்பவருக்கு சொந்தமான காரில் முகவூருக்கு வந்துவிட்டு தேவி ஆறு பாலம் வழியாக வரும்பொழுது நிலைதடுமாறி அவர்கள் மீது மோதியதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.