மதுரை,
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக உதவி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலரை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் தங்களது விசாரணையை நடத்தியுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடைவிதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் இந்திய தண்டனைச்சட்டம் 164-ன்படி மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெறவில்லை. மேலும் பேராசிரியை நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படவில்லை.
உயர் அதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் போலீசார் முடித்துவிட்டனர். பல்கலைக்கழக வேந்தர், பதிவாளர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயர் அதிகாரிகள் பட்டியலுக்குள் வருகின்றனர். அந்த உயர் அதிகாரி யார் என்று கூறவும் இல்லை. அவர்களிடம் விசாரிக்கவும் இல்லை. இதே கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் சரியான தீர்வு கிடைக்காது. எனவே வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.