நொய்யல்,
கரூர் மாவட்டம், பரமத்தி அருகே காருடையாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவர திட்டமிடப்பட்டு இருந்தது.
இதற்காக காருடையாம்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர். அவர்களுடன் காருடையாம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 20), புருஷோத்தமன் (17), பரமத்தி அருகே உள்ள புதுக்கநல்லி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் நவீன்குமார் (18) ஆகியோரும் சென்றனர்.
3 பேர் பலி
அப்போது அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துவிட்டு, தீர்த்தக்குடம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதில் பிரபாகரன், புருஷோத்தமன், நவீன்குமார் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்தபோது, ஆற்றில் மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளம் அருகே சென்றுவிட்டனர்.
நீச்சல் தெரியாததால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.
2 பேர் உடல்கள் மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடலுக்கு பிறகு புருஷோத்தமன், நவீன்குமார் உடல்கள் மீட்கப்பட்டன. பிரபாகரனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
விசாரணையில், புருஷோத்தமன் புகளூர் காகித ஆலை ஐ.டி.ஐ.யில் படித்து வந்ததும், மற்ற 2 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.