தமிழக செய்திகள்

''தமிழ் மொழி - கலாசாரத்தை பிரபலப்படுத்த மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது'' - பிரதமர் மோடி பேச்சு

‘‘தமிழ் மொழி - கலாசாரத்தை பிரபலப்படுத்த மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது’’ என சென்னையில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக வளர்ச்சி பயணத்தின் மேலும் உன்னத அத்தியாயத்தை கொண்டாட நாம் கூடியிருக்கிறோம். ரூ.31,500 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே தொடங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் இருக்கும் இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வேலைவாய்ப்புகளையும், தற்சார்பு நிலை நோக்கிய நமது உறுதிபாட்டையும் ஊக்கப்படுத்தும்.

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை விட சிறப்பான ஒரு வாழ்க்கைத்தரத்தை உங்கள் குழந்தைகள் வாழவேண்டும் என்று அனைவருமே விரும்புவீர்கள். இதற்கு முக்கியமான அடிப்படை தேவைகளில் ஒன்று தான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்.

எந்த நாடுகளெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனவோ, அந்த நாடுகள் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பது வரலாறு.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்

தலைசிறந்த தரமும், நீடித்த தன்மையுடன் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, அனைத்தும் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நிலையை நோக்கி நாம் பயணிக்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீரை கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்ய பணியாற்றி கொண்டிருக்கிறோம். குழாய் வழி குடிநீர் திட்டத்தின்மூலம் பாரபட்சமோ, விடுபட்டு போவதற்கான சாத்தியக்கூறு இருக்காது.

இளைஞர்களின் எதிர்பார்ப்பு

புறக்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படும்போது நாட்டின் இளைஞர்களே அதிகம் பயன்பெறுவார்கள். இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இது உதவுவதுடன், செல்வத்தையும் மதிப்பையும் உருவாக்க இதை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.

சில ஆண்டுகள் முன்பு வரை கட்டமைப்பு என்று சொன்னால் சாலைகள், மின்சாரம், நீர் ஆகியவை மட்டுமே கருதப்பட்டன. இன்று நாம் இந்தியாவின் எரிவாயு குழாய் வலைப்பின்னலை விரிவாக்க செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதிவேக இணையத்தை நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்வதே எங்கள் தொலைநோக்கு பார்வை. இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

தமிழ் மொழியை பிரபலப்படுத்த...

பிரதம மந்திரி கதி சக்தி திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கினோம். இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கு மிக உயர்தரம் வாய்ந்த கட்டமைப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும், அனைத்து அமைச்சகங்களையும் இந்த திட்டம் ஒருங்கிணைக்கும். செங்கோட்டையில் இருந்து தேசிய கட்டமைப்பு குழாய் பற்றி பேசியிருந்தேன். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.100 லட்சம் கோடிக்கும் மேற்பட்டது. இந்த தொலைநோக்கை மெய்ப்படுத்துவதை நோக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு புதிய வளாகம் ஒன்று இந்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்துக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. இங்கு ஒரு விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கு கூடம், பல்லூடக அரங்கும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தேசிய கல்வி கொள்கை

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்காக சுப்பிரமணிய பாரதியார் பெயரில் ஒரு இருக்கை சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் என் தொகுதியில் வருவதால் என் உவகை கூடுதல் விசேஷமானது.

இந்திய மொழிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை அவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய கல்வி கொள்கை காரணமாக தொழில்நுட்ப மருத்துவ படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே படிக்க முடியும். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்