ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் முன் இஸ்ரோ தலைவர் சிவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
பி.எஸ்.எல்.வி. சி.47 ராக்கெட் மூலம் ஜிசாட் 3 என்ற செயற்கை கோளுடன், மற்ற நாடுகளின் 13 சிறிய செய்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் நவீன செயற்கைகோள் இதுவாகும்.
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த செயற்கைகோள் சிறப்பாக செயல்படுகிறது. இது விரைவில் தகவல்களை அனுப்பும்.
சந்திரயான்-3 திட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம். கண்டிப்பாக சந்திரயான்-3 அனுப்பப்படும். ஆனால் அதை எப்போது விண்ணில் செலுத்துவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
அடுத்த மார்ச் மாதத்துக்குள் 13 செயற்கைகோள்களை அனுப்ப முடிவு செய்து உள்ளோம். ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., தகவல் தொழில்நுட்ப விண்கலம் போன்றவை அனுப்பவும் திட்டமிட்டு உள்ளோம்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. ஆதித்யா திட்டம், ககன்யா திட்டம், சிறிய செயற்கைகோள் போன்றவை வரும் ஆண்டில் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்ற எந்த திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. சந்திரயான்-2 ஆர்பிட்டர் நன்றாக செயல்படுகிறது. பயன் உள்ள தகவல்களை அனுப்புகிறது. அது விஞ்ஞானிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.