தூத்துக்குடி,
சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியில் வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி சிறுமிகளைச் கடத்தி சென்ற விவகாரத்தில் படுக்காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகனை தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தை என்றும் பார்க்காமல் கொடுமையான முறையில் வெட்டி காயப்படுத்தி உள்ளனர். ஒரே நாளில் 4 சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நாள்தோறும் இதே போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைகள் தாக்கப்படும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. பெண்கள் வாழ்வதே கேள்விக்குறியான நிலை உள்ளது. அச்சத்தோடு பெண்கள் வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீடு புகுந்து பெண் என்றும் பாராமல் வெட்டக்கூடிய துணிச்சல் மிகுந்த சம்பவம் நடந்துள்ளது.
சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. முதல்-அமைச்சருக்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த திறமையும் இல்ல, அக்கறையும் இல்லை.பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த 4 மாதங்களில் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.