சென்னை,
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.5,000-ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500-ஆகவும் உயர்த்தப்படுவது, இருசக்கர வாகன மானிய உயர்வு, கோயம்புத்தூரில் புதிய வக்பு தீர்ப்பாயம் அமைப்பது, கபர்ஸ்தான வசதி இல்லாத பகுதிகளில் அரசு நிலம் ஒதுக்கீடு, உருது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவை தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வரவேற்புக்குரியவை.
கர்நாடக அரசு போன்று உலமாக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் வக்பு தீர்ப்பாயங்களை அமைத்திட வேண்டும், அடக்கஸ்தலங்களுக்கான இடங்களை அரசு உடனடியாக ஒதுக்கித் தர வேண்டும், உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன போன்ற நீண்டகால கோரிக்கைகளை எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளான சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உயர்வு, பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான பிற முக்கிய கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.