விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஏழுசெம்பொன், கொசப்பாளையம், பழையகருவாட்சி ஆகிய கிராமங்களில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்த்து வைக்க முடியாத ஆட்சி நடந்து வருகிறது. முதியோர் உதவித்தொகை பலருக்கு வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினை இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருக்கிறது.
உதவித்தொகை வழங்குவதில் கூட அ.தி.மு.க. ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்சி பாகுபாடின்றி உதவித்தொகை வழங்கினோம். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை இப்படி எல்லாத்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது.
நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆனால் சட்டம்-ஒழுங்கு எங்கள் ஆட்சியில் சிறப்பாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
இந்த லட்சணத்தில் எங்கள் ஆட்சிக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்திவிட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தரமான பொருட்களுக்கு தான் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கொடுப்பார்கள். தரச்சான்று பெறுவதற்கு ஏற்ப உங்கள் ஆட்சி ஐ.எஸ்.ஐ. ஆட்சியா? ஊழலிலும், லஞ்சத்திலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதிலும், பொய் சொல்வதிலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார்கள்.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால் 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லாததால், முதல்-அமைச்சர் பொய்களையும், அவதூறுகளையும் சொல்லி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதை விட்டுவிட்டு மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பொய்சொல்லி ஓட்டு வாங்கிவிட்டார். அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஓட்டு போட்டுவிட்டீர்களாம். மிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிட்டேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நீங்கள் ஏமாறவில்லை. தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து தான் வாக்களித்தீர்கள். நான் ஏதாவது ஒரு பொய் சொல்லி இருக்கேனா?. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்ன உறுதிமொழிகளை ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவோம். அ.தி.மு.க. தொண்டனுக்கு உண்மையை சொல்லப்போகிறோம்.
ஏனெனில், ஒரு முதல்-அமைச்சர் சாவிலேயே மர்மம் இருந்தால் தொண்டனுக்கு எப்படி, இதை விடக்கூடாது. ஆட்சிக்கு வந்தவுடன் எதை விட்டாலும் விடாவிட்டாலும், அவரது மர்ம மரணத்தை மட்டும் விடமாட்டேன். எனது முதல் வேலையே அது தான்.