30-வது ஆண்டு நினைவுதினம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்திபவனில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட பலர் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கே.எஸ்.அழகிரி அளித்த பதில் வருமாறு:-
தமிழக முதல்-அமைச்சர், ஜனாதிபதிக்கு எழுதியிருக்கிற இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது. இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஒருவருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றாலும் சரி, விடுதலை அளிக்க வேண்டும் என்றாலும் சரி, அதனை நீதிமன்றம்தான் செய்ய வேண்டும். இதில் அரசியல் அழுத்தங்கள் கூடாது என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கொள்கை.
ஏற்புடையது அல்ல
ஒருவர் விடுதலை அடைவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. உதாரணமாக ராஜீவ்காந்தியின் வழக்கில் முதலில் 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இருக்கிற ஒரு காங்கிரஸ்காரனும் விடுதலை செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. காரணம் அது நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதுதான் இப்போதும் வர வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
தமிழக சிறைகளில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாடுகிறார்கள். தமிழர்கள் என்ற காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதில் மனிதாபிமானம் இருக்கிறது. குறிப்பாக ஒரு 7 பேருக்கு மட்டும் சொல்வது என்பது நியாயம் இல்லை. ஏற்புடையது இல்லை. இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கவில்லை. எங்களுடைய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.