ஈரோடு,
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு மாவட்டம் சென்றுள்ளார்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஈரோடு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஈரோடு ரயில் நிலையத்தில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் ஆட்சியர் பிரபாகர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கோபிச்செட்டிப்பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யர் சிலையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பின்னர் அங்கு சிறப்புரை ஆற்றிய அவர், நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது, எனவே ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுளை தினமும் வழிபட வேண்டும், அவ்வாறு வழிபட்டால் கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என்பதால் பாவங்கள் குறையும் என்று அவர் கூறினார். விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆட்சியர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆளுநர் பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், சமூக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளார்.