சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அ.தி.மு.க., அலுவலகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி, அதற்கு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள், விதிகளை மீறி செயல்பட்டுள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதை அரசு கண்காணிக்க வேண்டும். சென்னையில் மட்டுமே பெரும்பாலானோர் முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு வருகின்றனர். ஆனால், மாநிலத்தின் மற்ற இடங்களில் அவ்வாறு முககவசம் அணிவதில்லை. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அவற்றை பின்பற்றுவதில் பொதுமக்கள் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை தள்ளி வைத்தனர்.