குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி தோட்டத்தில் வசித்து வந்தவர் மாரப்பன் மகன் ராஜேந்திரன்(34). இவர் தனது தாய், தந்தையுடன் தங்கி விவசாயம் செய்து வந்தார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிறுவலூரை சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்க சொல்லி உள்ளார் ராஜேந்திரன். அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் அம்பிகா என்ற பெண் திருமண தரகரிடம் அறிமுகம் செய்து வைத்தாராம்.
இந்த நிலையில் அம்பிகா அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். வள்ளியம்மாள் தன் வீட்டுக்கு ரீசா என்ற மணப்பெண் அவரது அக்கா தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகக் கூறி, ராஜேந்திரனை பெண் பார்க்க வரச்சொல்லி உள்ளார்.
ராஜேந்திரனும் பெண் கிடைத்த சந்தோஷத்தில் உடனே கடந்த 22ஆம் தேதி தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று உறவினர்கள் சகிதமாக பூ பொட்டு வைத்து நிச்சயம் செய்துள்ளார்கள்.
புரோக்கர் அம்பிகா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் பெண்ணிற்கு உறவு என்று யாரும் இல்லை ஆகவே உடனடியாக திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதால், அடுத்த இரண்டு நாட்களுக்குள் கடந்த 24ஆம் தேதி மணப்பெண்ணிற்கு தேவையான தங்க தாலி, தங்க கம்மல் மற்றும் பட்டு புடவை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு எடுத்து கொடுத்துள்ளார். உள்ளூரிலேயே உள்ள ராஜேந்தரின் குலதெய்வக் கோவிலான செல்லியம்மன் கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் விமர்சனமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடித்ததும் புரோக்கர் கமிஷனாக ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார்கள். திருமணம் முடிந்து அடுத்த நாள் 25 ஆம் தேதி முழு அலங்காரங்களுடன் ராஜேந்திரன் இல்லாதபோது மதியம் 3 மணி அளவில் தொலைபேசி மூலமாக காரை வரவழைத்து காரில் ஏறி மாயமாக சென்றுவிட்டார்.
ராஜேந்திரன் மனைவி ரீசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக இதுபற்றி புரோக்கர் சந்திரனிடம் கூறியுள்ளார் சந்திரன் மணப்பெண் கூறிய விலாசத்திற்கு அரியலூர் சென்று பார்த்தபோது அங்கு ரீசாவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒன்பது வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இரண்டு குழந்தைகளையும் ரீசாவின் தாய் பராமரிப்பில் உள்ளார்கள் என்பது தெரியவந்தது. ரீசா தனது கணவரை பிரிந்து கடந்த நான்கு வருடங்களாக கேரளாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், தனது உறவினர்கள் என்று கூறிய தங்கம் தேவி ஆகியோர் இது மாதிரி ஏமாற்றி திருமணம் செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறியதால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதாகவும் தெரிந்தது. ராஜேந்திரன் ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து என்னிடம் நகை மற்றும் பணம் பெற்றுக்கொண்டார்கள்.
ஆகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா எஸ்.ஐ துரைசாமி மற்றும் காவலர்கள் மணப்பெண் ரீசா மற்றும் புரோக்கர் அம்பிகா வள்ளியம்மாள் உறவினர்கள் என்று கூறிய தங்கம் தேவி ஆகியோரை கைது செய்து ஊத்துகுளி கோர்ட்டில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.