தேனி,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஆண் மற்றும் பெண் என 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 10 பேர் காயம் எதுவும் அடையவில்லை.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 15 பேர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திவ்யா என்ற பெண் இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த திவ்யாவுடன் சென்ற அவரது கணவர் விவேக் காட்டுத்தீயில் சிக்கி சம்பவ பகுதியிலேயே உயிரிழந்து விட்டார்.
இதனால் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.