தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக திறக்க முடிவு: அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும்

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக திறக்க முடிவு செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்:-

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தை கூட்டி தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுவரை அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டுவதில் பின்பற்றப்பட்ட நடைமுறையை பின்பற்றாமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டும் கூட்டி இருப்பது ஏனென்று விளங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்' என்று எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு நெருடலாகவும், உறுத்தலாகவும் உள்ளது.

பொதுமக்களின் உயிரை காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முரணான முடிவுக்கு ஒவ்வாமையுடன் ஏற்கும் அதே வேளையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திறக்கப்படுவதற்கு இது வழிவகுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்; அதை நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?. உயிர்காக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒத்துழைக்க கூடியவர்களை மட்டும் கூட்டி ஆலையை திறக்கலாம் எனும் ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும், எதிர்காலத்தையும் மதித்தே முடிவு எடுத்திருக்க வேண்டும். தமிழகம் இத்தருணத்தில் தேசத்திற்கு கைகொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அது தூத்துக்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நடத்திய போராட்டத்தை பொருளிழக்க செய்யும் விதமாக அமைந்து விடக்கூடாது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிகழ்வை நினைவில்கொண்டு தூத்துக்குடி மக்களின் நம்பக தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க கட்டுப்பாடுகளையும், உரிய கோர்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்:- தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காற்றை நச்சாக்கிய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு துணை போகும் முடிவை கைவிட்டு, வேறு வழிகளில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:- ஆக்சிஜன் உற்பத்திக்காக தேவையான பணியாளர்களை தமிழக அரசு தனது பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் அனுப்பி ஆக்சிஜன் உற்பத்திக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக தமிழக அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்