தமிழக செய்திகள்

மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன் தி.மு.க. வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உருக்கம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்ததாகவும், தி.மு.க. வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்றும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்தப்பட்ட சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தபோது, நான் ஒரு விவசாயியாக இருந்து இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்வதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாகக் காட்சியளிக்கின்ற ஜெயலலிதா தந்த பாக்கியமாக நான் எண்ணுகிறேன் என்றார். அப்போது அவரது கண்கள் கலங்கி போய் இருந்தது.

இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தேர்வு குழுவுக்கு அனுப்பப்படாததால் தி.மு.க. குரல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பில் ஈடுபட்டது. இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை. இன்றைக்கு பல ஆண்டு காலமாக டெல்டா விவசாயிகள் தங்கள் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், விவசாயிகளின் அரசு என்ற அடிப்படையில் இந்த சட்ட மசோதாவை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த சட்ட மசோதா எப்படி உள்ளது என்பதை நானும், சட்டத்துறை அமைச்சரும் விளக்கமாக சொன்னோம். இதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. முழுமையான பாதுகாப்பு உள்ள சட்ட மசோதாவை அவையில் தாக்கல் செய்து இருக்கிறோம் என்பதை புள்ளி விவரத்துடன் எடுத்து கூறினோம்.

வேண்டுமென்றே இவர்கள் திட்டமிட்டு, அ.தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும், இதற்கு ஏதாவது இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. உண்மையிலே நாங்கள் வருத்தப்படுகிறோம். நான் விவசாயியாக இருக்கின்ற காரணத்தினாலே சொல்கிறேன், இது மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதா. விவசாயிகளுக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறோம். இதைகூட அரசியல் ஆக்கி, வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

ஏகமனதாக, ஒட்டு மொத்தமாக விவசாயிகள் பல ஆண்டுகள் வைத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக தான் இந்த மசோதாவை நிறைவேற்றினோம். அவர்களும் (தி.மு.க.) ஒத்துழைத்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருந்தாலும், விவசாயிகளை காக்க கூடிய ஒரே அரசு, அ.தி.மு.க. அரசு தான். அவர்கள் (தி.மு.க.) ஆதரவு அளிக்காவிட்டாலும் ஒட்டு மொத்த தமிழகத்தில் உள்ளவர்களும், விவசாயிகளும் ஆதரவு அளிப்பார்கள், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த அடிப்படையிலேயே இந்த மசோதாவை தாக்கல் செய்து இருக்கிறோம். இந்த சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இந்த சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு இருந்தேன். ஆனால் அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள், பரவாயில்லை. நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை