தமிழக செய்திகள்

இந்தி தெரியாது என்று சொன்னதால் ‘நீங்கள் இந்தியரா?’ என்று கனிமொழியிடம் கேட்ட பெண் அதிகாரி - சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவு

இந்தி தெரியாது என்று சொன்னதால் கனிமொழி எம்.பி.யிடம் நீங்கள் இந்தியரா? என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி ஒருவர் கேட்டார். சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து செல்லும்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் கூறினார்.

ஆனால், கனிமொழி எம்.பி.யோ, எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள் என்றார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி நீங்கள் இந்தியரா? என்று கனிமொழியிடம் கேட்டார். இதனால் கனிமொழி அதிர்ச்சியடைந்தார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரமே இருந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, கனிமொழி எம்.பி. டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு இந்தி தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியிடம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு விமான நிலையத்தில் வைத்து கூறினேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியர் தானே? என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தி திணிப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கனிமொழியிடம் இந்தியரா? என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்பட சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட அந்த அதிகாரிக்கு எதிராக கண்டன குரல்கள் பதிவாகிய வண்ணம் இருந்தன. இந்தநிலையில், டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி இறங்கியபோது, சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில், உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி