சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்க தொடங்கியுள்ளது. தி.மு.க. ஏற்கனவே விருப்பமனு வாங்குதலை தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. வரும் 24-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே தே.மு.தி.க. சார்பில் வரும் 25-ந்தேதி முதல் விருப்ப மனு தொண்டர்களிடம் இருந்து பெறப்படுகிறது.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருப்ப மனு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் வருகிற 25-ந் தேதி முதல் மார்ச் 5-ந் தேதிவரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை பெற்றுக்கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.