தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது பொதுமக்கள் ஏகோபித்த வரவேற்பு

தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் நேற்று முதல் அமலானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 அறிவிப்புகளை வெளியிட்டு கையெழுத்திட்டார்.

இதில் சாதாரண கட்டண டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை திட்டம், தமிழகம் முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி சாதாரண கட்டண பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை மிகுந்த வரவேற்பு அளித்த மக்கள், அந்த திட்டம் உடனடியாக நேற்றே அமல்படுத்தப்பட்டது கண்டு ஆச்சரியம் கொண்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த திட்டத்துக்கு ஏகோபித்த வரவேற்பு பெண்கள் மத்தியில் இருந்து கிடைத்து வருகிறது.

பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பெண்களுக்கு கட்டணம் கிடையாது என்ற ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்ட ஏராளமான சாதாரண கட்டண பஸ்கள் புறப்பட்டன. இதில் பயணம் செய்த பெண்கள் கட்டணமின்றி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். எந்த நாளும் இல்லாதது போல ஒரு புதுவித அனுபவத்துடன் நேற்று பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

சில பெண்கள், என்ன... இந்த திட்டம் இன்று முதலே வந்துவிட்டதா?, என்று ஆச்சரியத்துடன் கேட்டபடியே பஸ்களில் ஏறினர். அரசு அளித்த திட்டம் என்பதால் பெண்கள் முதன்முறையாக உரிமையாக பஸ்களில் இலவசமாக பயணம் செய்தனர்.

பொதுமக்கள் பாராட்டு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது பெண்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரது மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல தி.மு.க.வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அந்தவகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு தி.மு.க. தொண்டர்கள் சிலர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இதேபோல அந்தந்த பகுதிகளில் உள்ள தி.மு.க.வினரும் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்