சரக்கு ரெயில்
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்துக்கு சரக்கு ரெயில் மூலம் நிலக்கரி கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் ஒன்று நிலக்கரி பாரத்தை இறக்கி விட்டு 59 காலி பெட்டிகளுடன்
சென்னைக்கு நேற்று காலை 7 மணியளவில் மேட்டூரில் இருந்து புறப்பட்டு சென்றது.நேற்று காலை 7.30 மணி அளவில் ஓமலூர் அருகே லோக்கூர் ரெயில் நிலையத்த தாண்டி குப்பன் கொட்டாய் அருகே சரக்கு ரெயில் சென்றது.
அப்போது தண்டவாளத்தில் இருந்து பலத்த சத்தம் கட்டது. உடனே டிரைவர் ராஜேஷ்குமார், சரக்கு ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது அந்த ரெயிலின் 18-வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு இறங்கி நின்றது. மேலும் அந்த ரெயில் பெட்டியின் ஆக்சில் துண்டாகி தண்டவாள பகுதியில் கிடந்ததும் தெரியவந்தது.
மீட்பு பணி
இதனிடையே பலத்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தண்டவாள பகுதிக்கு திரண்டு வந்தனர். மேலும் ரெயில் தடம் புரண்டது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீநிவாஸ், என்ஜினீயர் ராஜநரசிம்மாச்சாரி உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஈரோட்டில் இருந்து உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு, தண்டவாளத்தை விட்டு இறங்கிய ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தரம் புரண்ட அந்த ஒரு பெட்டியை தவிர்த்து சரக்கு ரெயிலின் ஒரு பகுதி ரெயில் பெட்டிகளை பொம்மிடி ரெயில் நிலையத்துக்கும், மறுபகுதியை லோக்கூர் ரெயில் நிலையத்துக்கும் தனி என்ஜின் மூலம் இயக்கி கொண்டு செல்லப்பட்டு அந்தந்த ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து தண்டவாளத்தை சரி செய்த பின்பு தடம் புரண்ட ரெயில் பெட்டியை சரக்கு ரெயிலுடன் இணைத்து அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தடம்புரண்ட ரெயில் பெட்டிகள்
தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு, என்ஜின் மூலம் இழுத்து செல்லப்பட்டது.
இதனிடையே ரெயில் பெட்டி தடம் புரண்டது தொடர்பாக ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.