சென்னை,
உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.
மரணமடைந்த மதுசூதனன் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர் மதுசூதனன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முன்னனி நிர்வாகிகள், திமுக அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், தற்போது மறைந்த மதுசூதனனின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இறுதி ஊர்வலத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் மின்மயானத்தில் இன்னும் சற்று நேரத்தில் மதுசூதனனின் உடல் எரியூட்டப்பட உள்ளது.