பேராவூரணி,
கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் உருக்குலைந்து காட்சி அளிக்கின்றன. பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று குடிநீர் கேட்டு பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலையின் குறுக்கே சேதுரோடு முக்கம் பகுதியில் பொதுமக்கள் மரக்கிளைகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேராவூரணியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தராசு வீட்டை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவிந்தராசு எம்.எல்.ஏ., வெளியே வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல் ஒரத்தநாடுபுதூர் புறவழிச்சாலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவிலூர் பகுதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்து உள்ள முதலியப்பன்கண்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை கண்டித்து ஆலங்குடி-வேட்டைக்காரனிருப்பு சாலையில் கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு சென்று சாலையின் குறுக்கே போடப்பட்டு இருந்த மரக்கட்டைகளை அகற்ற முயன்றனர்.
அப்போது பொதுமக்களுக் கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென பொதுமக்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டதில் 11 போலீஸ் காரர்கள் காயம் அடைந்தனர். நாகை மாவட்டத்தில் மட்டும் நேற்று 26 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருவாகுறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், மின் வினியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மேலவாசலில் நேற்று காலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகளும், போலீசாரும் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாரிகள் செல்லும் கார்கள் பல இடங்களில் வழிமறிக்கப்பட்டு சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றதால் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தடுமாற்றம் அடைந்தனர். அரசுக்கு சொந்தமான கார்களை கிராம மக்கள் தொடர்ந்து மறித்ததால் அதிகாரிகள் தனியாருக்கு சொந்தமான கார்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த எருக்கலகோட்டை, ராஜேந்திரபுரம், ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மரங்களை ரோட்டின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதே போல குளமங்கலம், பனங்குளம் உள்பட பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
திண்டுக்கல்லை அடுத்த கோவிலூர், நல்லூர், ரெத்தினகிரியூர் ஆகிய கிராமங்களில் கடந்த 3 நாட்களாக மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், புயலால் சேதமடைந்த வீடுகளை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.