தமிழக செய்திகள்

அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது - டிக்கெட் கட்டணத்தில் மாற்றமில்லை

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே 7-ந் தேதி முதல் பஸ் சேவை தொடங்க இருக்கிறது. இதையொட்டி அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே ஆம்னி பஸ்களை இயக்க தயாராக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு பஸ்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. முதல்-அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பஸ்களின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.

தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று பிற்பகலில் தொடங்கியது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் முக கவசம் அணிந்த பயணிகள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இதேபோல தாம்பரம் பஸ் நிலைய வளாகத்திலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதுதவிர TNSTC Mobile App என்ற செல்போன் செயலி வழியாகவும் பயணிகள் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

7-ந் தேதி அதிகாலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்கள் வெளியூருக்கு இயக்கப்பட உள்ளன. 44 பேர் அமரும் வசதி கொண்ட அரசு விரைவு பஸ்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 26 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு வெளியூர்களுக்கு பஸ் சேவை இயக்கப்பட உள்ள நிலையில், டிக்கெட் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதுகுறித்த தகவல் பலகைகளும் டிக்கெட் முன்பதிவு மையம் அருகே வைக்கப்பட்டு இருந்தது. அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பஸ் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு