தமிழக செய்திகள்

அனைத்து கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் அழுத்தமாக பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறிவிட்டது; வைகோ குற்றச்சாட்டு

அனைத்து கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் அழுத்தமாக பதிவு செய்ய, வேண்டும் என்றே தமிழக அரசு தவறிவிட்டது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு ஏஜெண்டு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 1996-ல் இருந்து போராடி வருகின்றேன். சென்னை ஐகோர்ட்டில் 1997-ல் ரிட்' மனு தாக்கல் செய்தேன். அதில் நானே வாதாடினேன். 2010 செப்டம்பர் 28-ந்தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது.2013 ஏப்ரல் 2-ந்தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பாயத்திற்கு சென்று வழக்குத்தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட்' மனு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தேன். அந்த ரிட்' மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. இதற்கிடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது.

தமிழக அரசு தவறிவிட்டது

தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது. தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்கவேண்டும். அதைப் பகிர்ந்து வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று (நேற்று) சுப்ரீம் கோர்ட்டில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது.தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது. மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்துவிட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.