சென்னை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு 2020-2021-ம் ஆண்டுக்கான நெல்லுக்கான விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,918 என்றும், சன்னரகத்துக்கு ரூ.1,958 என்றும் நிர்ணயித்திருக்கிறது. இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,871 என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் தீர்மானித்திருக்கிறது. மத்திய அரசு இந்த ஆண்டு நெல்லுக்கான விலையாக கடந்த ஆண்டைவிட வெறும் ரூ.53 மட்டுமே உயர்த்தி சாதாரண ரகத்துக்கு ரூ.1,868-ம், சன்னரகத்துக்கு ரூ.1,888 எனவும் தீர்மானித்திருக்கிறது. உற்பத்தி செலவை மட்டுமே விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக அரசு, இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சன்னரகத்துக்கு ரூ.70, சாதாரண ரகத்துக்கு ரூ.50 என்று வழக்கம் போல் அறிவித்திருப்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. நெல்லுக்கான விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். உடனடியாக நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், நனைந்து வீணாகிப்போன நெல்லுக்குரிய இழப்பீட்டை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.