தமிழக செய்திகள்

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி தொடர அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி தொடர அத்தனை உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எழிலன் (தி.மு.க.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.), சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களின் நிலை குறித்தும், அவர்களின் கல்வி தொடர எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) பேசும்போது, உக்ரைனில் தவித்த மாணவர்களை ஆபரேசன் கங்கா மூலம் பத்திரமாக மீட்டுவந்த மத்திய அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வருகிறது. எனவே, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்' என்றார்.

கல்வி தொடர...

ஜி.கே.மணி (பா.ம.க.), உக்ரைன் போரால் கல்வியைத் தொடர முடியாமல்போன மாணவர்களுக்கு கல்வி தொடர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தமிழக மாணவர்களின் எதிர்காலம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

உக்ரைனில் தவித்த ஆயிரத்து 890 தமிழக மாணவர்களை எந்த பாதிப்பும் இன்றி பாதுகாத்து நம்முடைய முதல்-அமைச்சர் கொண்டுவந்துள்ளார்.

மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார். பிரதமரை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தினார். மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது.

உதவி செய்வோம்

எங்கெல்லாம் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு இருக்கிறதோ அங்கு மாணவர்கள் படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உக்ரைனை போலவே போலந்து, கஜகஸ்தான், ஹங்கேரி, ருமேனியா, செக்குடியரசு உள்ளிட்ட நாடுகளில் பாடப்பிரிவுகள் இருப்பதால் அங்கு மாணவர்கள் சென்று படிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துரு உருவாக காரணமாக இருந்தவர் நம்முடைய முதல்-அமைச்சர்தான். மாணவர்களுக்கு தமிழகம் அல்லது இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது பிற நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பினாலும் அத்தனை உதவிகளையும் தமிழக அரசு செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு