உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. திருநங்கைகளின் குலதெய்வ கோவிலாக கருதப்படும் இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கூத்தாண்டவரை தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.
தேரோட்டம்
நேற்று அதிகாலையில் கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று தேரில் வைக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புஜங்கள், விண்குடை, பாதம், கைகள் உள்ளிட்டவை கொண்டு அரவாண் திருஉருவம் அமைக்கப்பட்டது. பின்னர் 8.30 மணியளவில் தேரோட்டம் நடந்தது.
இந்த தேரை, குமரகுரு எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாக தேர், பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வந்தது. தேர் சென்ற வீதிகள்தோறும் திருநங்கைகளும், பக்தர்களும் ஆங்காங்கே கற்பூரங்களை ஏற்றிவைத்து வணங்கினர்.
ஒப்பாரி வைத்தனர்
பின்னர் பெரியசெவலை சாலையில் உள்ள அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டது. அதுவரை புதுமண பெண்கள் போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து மகிழ்ச்சியாக இருந்த திருநங்கைகள், சோகமயமாகினர். அப்போது திருநங்கைகள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து கதறி அழுதபடி வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு தேரை பின்தொடர்ந்து சென்றனர்.
அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலை தேர் சென்றடைந்ததும், அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்குமப்பொட்டை அழித்தனர்.
விதவை கோலம்
பின்னர் பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்தார்கள். அதன் பிறகு திருநங்கைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குளித்து வெள்ளை சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சோகமாக அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.