சென்னை,
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் 15-ந்தேதி வெளியானது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு 8-ந்தேதி (இன்று) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை என்று கூறப்படுகிறது. பதிவெண் இல்லாததால், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
அப்போது “உங்களது பதிவெண் நந்தனம் மையத்தில் இருக்கும் என்றும் அங்கு சென்று தேர்வு எழுதுமாறும், தேர்வு மைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இனி நந்தனம் சென்றால் நேரம் ஆகும் என்றும், தங்களால் தேர்வை சரியாக எழுத முடியாது என்றும் தெரிவித்து தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்புடன் காணப்படுகிறது.
இதையடுத்து, சென்னையில் மட்டும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.