வீடு இடிந்து விழுந்தது
கரூர் அருகே உள்ள நெரூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75). இவரது மனைவி லட்சுமி (70). இவர்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதிகளான கந்தசாமி-லெட்சுமி, அவர்களுக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கந்தசாமியும், லெட்சுமியும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். நேற்று காலை 6 மணிக்கு எழுந்த கந்தசாமி கடைவீதிக்கு சென்று விட்டார். பின்னர் எழுந்த லெட்சுமி டீ போடுவதற்காக சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் மேல்தளம் இடிந்து லெட்சுமியின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
மூதாட்டி பலி
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டுக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி சென்று பார்த்தனர். அதற்குள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி லெட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி பலியான லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு
இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தசாமி வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பிணமாக கிடந்த தனது மனைவியின் உடலை பார்த்து கந்தசாமி கதறி அழுதது கல்நெஞ்சை கரைய வைப்பதுபோல இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.