சென்னை,
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் வீட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். அவர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லாத நிலையில் அவர் வசித்து வந்த வீட்டை பொதுத்தேவைக்காக எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரத்தை தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் வெளியிட்டுள்ளார். நிலத்தை வெளிப்படைத்தன்மையுடன் கையகப்படுத்தி, அங்கு வசிப்போருக்கு நியாயமான இழப்பீட்டை அளித்து, அவர்களை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கு ஏற்பாடு செய்வதற்கான 2013-ம் ஆண்டு சட்டத்தின்படி இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜெயலலிதா வசித்து வந்த வீட்டை பொதுத்தேவைக்காக அதாவது அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அந்த நிலத்தின் மீது பற்றுள்ள வாரிசுதாரர் யார்? என்பதை அறிய வேண்டியதுள்ளது. அங்கு தரைதளம் மற்றும் 2 மாடிகள் கொண்ட கட்டிடம் உள்ளது. கட்டிடங்கள் உள்ள தரைப்பரப்பளவு 2,224.56 சதுர மீட்டராகும்.
அந்த இடத்திற்கு பற்றுள்ள நபரின் ஆட்சேபணையை அறிந்து, உரிய விசாரணைக்கு பின்பு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த நில எடுப்பினால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் அங்கு யாரும் இல்லை.
எனவே அவர்களை அப்புறப்படுத்தி, மறுகுடியமர்வு செய்து மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை எதுவும் தேவையில்லை. எனவே அதற்கு தேவையான மாற்று இடம் கண்டறியப்படவில்லை. கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலம், அரசின் திட்டங்களுக்காக தோண்டப்படும்.
இந்த திட்டத்துக்கான வரைபடத்தை, கிண்டியில் உள்ள தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம், ஜெயலலிதா மற்றும் அவரது தாயாரும் நடிகையுமான சந்தியாவால் 1967-ம் ஆண்டு ஜூலையில் வாங்கப்பட்டது. அப்போது அதன் விலை ரூ.1.32 லட்சமாக இருந்தது.
தற்போது 24 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.43.97 கோடியாக கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு மதிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போதுள்ள நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுதாரர் யார்? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே அரசின் நில எடுப்புப் பணிக்கு சட்ட ரீதியான பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.
வாரிசுகள் யாரென்பது முடிவு செய்யப்பட்டுவிட்டால், அரசிடம் இருந்து அந்த வீட்டுக்கான இழப்பீட்டை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சட்ட ரீதியான பிரச்சினைகள் எழாத நிலையில், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த 3 மாத காலம் ஆகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் பட்சத்தில், சென்னையில் அரசு நினைவிடமாகும் முன்னாள் முதல்-அமைச்சர்களின் இரண்டாவது வீடாக அது அமையும். முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜின் தியாகராயநகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வீடு ஏற்கனவே அரசு நினைவிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.