தமிழக செய்திகள்

தமிழகத்தில் ‘கஜா’ புயல் பாதிப்பு: எடப்பாடி பழனிசாமியுடன், ராஜ்நாத் சிங் பேசினார் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை

‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், பணியாளர்களும் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு, சேத விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், தற்போது புயலால் ஏற்பட்ட சேதங்கள், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து விளக்கமாக ராஜ்நாத் சிங்கிடம், எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

தமிழக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82 ஆயிரம் பேருக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உள்பட அனைத்து நிவாரண பணிகள் குறித்தும் விளக்கினார்.

கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...