திருச்சி,
மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருந்த போது, அவரது அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவநாதன். இவர் மீது திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எனக்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் 50 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நெல்லையை சேர்ந்த காமராஜ் என்பவர், தன்னை அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு நெருக்கமானவர் என கூறிக்கொண்டு என்னிடம் அறிமுகமானார். அவர் தனக்கு இலுப்பூர் பகுதியில் சூரிய மின் தகடு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலம் வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
ரூ.20 லட்சம் தந்தார்
நான் எனது 50 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 150 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களிடமும் பேசி அவர்களது நிலப்பத்திரங்களையும் வாங்கி காமராஜிடம் கொடுத்தேன். இதற்காக மொத்தம் ரூ.1 கோடி எனக்கு தருவதாக உறுதி அளித்த காமராஜ், முன்பணமாக ரூ.20 லட்சத்தை எனக்கு தந்தார். நான் அந்த பணத்தை என்னை நம்பி நிலம் ஒப்படைத்த நபர்களுக்கு பிரித்து கொடுத்தேன்.
நான் மீதி தொகையை தரும்படி கேட்டபோது, காமராஜ் என்னிடம் எதுவும் பேசாமல் மற்ற நில உரிமையாளர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் எனக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் நான் எனது வக்கீல் மூலம் நத்தம் விசுவநாதனுக்கு நடந்த சம்பவங்களை விளக்கி கூறி எனக்கு பணம் தரும்படி கேட்டு நோட்டீசு அனுப்பினேன். இதற்கு நத்தம் விசுவநாதன் எனக்கும் காமராஜுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி பதில் நோட்டீசு அனுப்பினார்.
மிரட்டல்
நான் நோட்டீசு அனுப்பியதற்கு பின்னர் நத்தம் விசுவநாதனின் பினாமி என கூறிக் கொண்ட காமராஜ் மற்றும் அவரது ஆட்கள் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்தனர். மேலும், காமராஜ் கொடுத்த ரூ.20 லட்சத்துடன் கூடுதலாக ரூ.30 லட்சத்தை சேர்த்து மொத்தம் ரூ.50 லட்சம் பணம் தரவேண்டும் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி நான் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் 10 முறை புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நத்தம் விசுவநாதன் தூண்டுதலின்பேரில் அவரது ஆட்கள் என்னை மிரட்டி இருக்கிறார்கள். எனவே நத்தம் விசுவநாதன், காமராஜ் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் அருண் குமார், தோட்டம் பாஸ்கர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முரளிதர கண்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், காமராஜ், அருண்குமார், தோட்டம் பாஸ்கர் ஆகிய 4 பேர் மீதும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை ஒரு மாத காலத்திற்குள் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.