சென்னை,
கனிம சுரங்கம் அமைக்க மக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு பிரிவு சமீபத்தில்(8.9.2025) ஒரு அலுவலக குறிப்பானை வெளியிட்டுள்ளது. அதில் தாமிரம், டைட்டானியம், பாஸ்பரஸ், பொட்டாஸ், சிலிக்கான் போன்ற 30 வகையான கனிமங்கள் முக்கிய வகை கனிமங்கள், அணுக் கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டு, இத்தகைய கனிமங்களை சுரங்கம் அமைத்து விரைவாக தோண்டி எடுப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் யுக்தி ரீதியான காரணங்களுக்காகவும், திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் அந்தந்த பகுதி மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் 1994 மற்றும் 2006 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சேர்க்கப்பட்டது. அதன் முக்கிய அம்சமே பொதுமக்களின் கருத்து கேட்புதான். கடந்த கால பல தலைமுறைகளுக்கும், எதிர்காலத்தில் வர இருக்கின்ற பல தலைமுறைகளுக்கும் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை அம்மக்களிடம் இருந்து எடுப்பதற்கு முன்பாக நியாயமான காரணங்களை எடுத்துக் கூறி, மக்களின் ஒப்புதல் பெற்ற பிறகு நிறைவேற்றுவதுதான் சரியானதாகும். மக்கள் கருத்துகளை கேட்காமல் செயல்படுத்துவது மக்களின் நில உரிமையை மற்றும் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்.
தமிழ்நாட்டில் பழனி மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கவுந்தி மலை, வேடியப்பன் மலை ஆகியவற்றில் இரும்புத்தாது உள்ளது. அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் தோண்டி எடுக்கலாம் என்ற நிலையும் அதைப்போல தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அரிய வகை மண் கனிம படிவுகள் உள்ளன. குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள், மணல் திட்டுகளின் தாயகமாகவும் விளங்குகின்றன. இவை கடல் அரிப்புகளுக்கும், சூறாவளிகளுக்கும் எதிரான இயற்கை பாதுகாப்பு கேடயங்களாக விளங்குகின்றன. இது போன்ற பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்வி கூறி ஆகும்.
அணுக் கணிமச் சுரங்கங்கள் அருகமையில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் அணுக்கதிர் வீச்சு ஆபத்துகள், நோய் பாதிப்புகளும் ஏற்படும். ஆகவே சுற்றுச்சூழல் சம்மந்தமான குறிப்பானை பற்றி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட வேண்டும். அதுவரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அலுவலக குறிப்பாணையை உடனே ரத்து செய்ய வேண்டும், பொதுமக்களின் வாழ்வாதார உரிமை பாதுகாப்பதுடன் இயற்கை வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.