சென்னை,
மதுரையில் மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலில் பெரியார், அண்ணா ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் பெரியார் படம் மட்டும் திடீரென அகற்றப்பட்டது. இந்த மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“அ.தி.மு.க. நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெரியார் படம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அது அ.தி.மு.க. நடத்தும் மாநாடு இல்லை. அ.தி.மு.க. என்ற கட்சி இன்று அடகு வைக்கப்பட்ட நிலையில் இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே முதலாளி சொல்வதை தொழிலாளி செய்கிறார். பெரியார் படத்தை மட்டுமல்ல, அண்ணா, ஜெயலலிதாவின் படங்களை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னாலும் எடுத்துவிடுவார். இன்னும் கொஞ்ச நாட்களில் அ.தி.மு.க.விற்கு நீங்கள் தேவையில்லை, வெளியே செல்லுங்கள் என்று அவர்கள் சொன்னாலும், இவர் வெளியே சென்றுவிடுவார்.
அதே சமயம், அவர்கள் இருக்கும் இடத்தில் பெரியார் இருக்க மாட்டார், இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர் நம்முடைய பெரியார். அவர்களுக்கு பெரியாரின் பெருமை நிச்சயமாக புரியாது. பெரியாரை புரிந்து கொள்ளாதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை, வேலையும் இல்லை. பெரியாரை மறுப்பவர்கள் தமிழ்நாட்டில் மறுக்கப்படுவார்கள்.
இன்று இத்தனை பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து படித்திருக்கிறோம், பட்டம் பெற்றிருக்கிறோம், பணிகளில் இருக்கிறோம், அரசியலில் ஈடுபடுகிறோம் என்றால், முதன் முதலாக நமக்காக குரல் கொடுத்தவர் பெரியார்தான். அந்த வழியில்தான் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் ஆட்சியை நடத்தி வந்துள்ளார்கள்.
பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியதால் தான், இந்தியாவிலேயே 42 சதவீதம் உழைக்கும் பெண்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.