தமிழக செய்திகள்

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை

பேரணாம்பட்டு அருகே சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து கொன்றது.

பேரணாம்பட்டு வனசரகத்தில் மோர்தானா, பத்தலப் பல்லி, பல்லல குப்பம், சேராங்கல் ஆகிய வனப் பகுதிகளில் குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தைகள் கடந்த சில ஆண்டுகளாக அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூர் உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளையும், விவசாய நிலங்களில் பட்டியில் கட்டப்பட்டுள்ள ஆடு, மாடுகளையும் வேட்டையாடி வருகின்றன.

பேரணாம்பட்டு அருகே பல்லல குப்பம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் சங்கர மூர்த்தி என்பவருக்கு தோப்பில் சங்கர மூர்த்தி 4 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை 11.30 மணியளவில் தோப்பில் காவலாளியாக வேலை செய்து வரும் ஓங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (50), இவரது மனைவி சசி (40) ஆகியோர் தோப்பிற்கு வந்த போது, ஒரு சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை மார்பு, வயிறு பகுதியில் கடித்து வேட்டையாடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனவர் சரவணன், பல்லல குப்பம் கிராமநிர்வாக அலுவலர் ஜெய்குமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மாலை 3.30 மணியளவில் மேல்பட்டி கால்நடை மருத்துவர் பவித்ரா ஆட்டை பிரேத பரிசோதனை செய்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.