சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு கொள்கை முடிவு
விலையில்லா மடிக்கணினிகள் 2019-2020 கல்வியாண்டு முதல், பிளஸ்-1 வகுப்பில் இருந்தே மாணாக்கர்களுக்கு வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 2018-2019-ம் கல்வியாண்டில் ரூ.152 கோடி செலவில் 41 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் 49.1 சதவீதமாகவும், மாணவிகளின் சதவீதம் 48.2 எனவும், ஆக மொத்தம் 48.6 சதவீதம் என உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நம் மாநிலத்தை அறிவுத் தலைநகரமாகவும், புதிய கண்டுபிடிப்புகளின் மையமாகவும் மாற்றுவதே நமது உயர் கல்வித் துறையின் நோக்கமாகும்.
லோக் ஆயுக்தா
லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு, 13-11-2018 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் முடிவுற்று, விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.
சமூக நீதிக்காக போராடிய ராமசாமி படையாச்சியாரின் உருவப் படத்தை சட்டமன்றப் பேரவையில் வைக்க அ.தி.மு.க. அரசு ஆணையிட்டுள்ளது. அன்னாருக்கு கடலூரில் மணி மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் கட்டவும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூண்டில் வளைவு
ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு இயற்கை சீற்றங்களின்போது, தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் நேவ்டெக்ஸ் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பொழிக்கரை கிராமத்தில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடல் சீற்றத்தினை குறைக்கும் வகையில், தூண்டில் வளைவு அமைக்கப்படும். கச்சத்தீவை மீட்போம் என்ற லட்சியத்தை அடையும் வரை அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.