தமிழக செய்திகள்

சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் ஓடியது

சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2007ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டம் தயாரிக்கப்பட்டது. விமான நிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை (33 கிலோ மீட்டர் நீளம்) முதல் வழித்தடமும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை (22 கி.மீ. நீளம்) 2வது வழித்தடமும் உருவாக்கப்பட்டது.

2009ம் ஆண்டு ரூ.14,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட்டது. உயர் மட்டப்பாதை, சுரங்கப்பாதை என்று 2 விதமாக ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன. 7 ஆண்டுகளுக்கு பிறகு, 2வது வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு ஆலந்தூர் இடையே (10 கி.மீ. நீளம்) உயர்மட்டப்பாதையில் 2962015 அன்று மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

சுரங்கப்பாதையில் தொடக்கம்

அதன்பின்னர், முதல் வழித்தடத்தில் உள்ள சின்னமலை விமான நிலையம் (9 கி.மீ. நீளம்) இடையேயும், 2வது வழித்தடத்தில் உள்ள ஆலந்தூர் பரங்கிமலை (1.2 கி.மீ. நீளம்) இடையேயும் 2192016 அன்று மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தற்போது, 2வது வழித்தடத்தில் கோயம்பேடை அடுத்த திருமங்கலம் நேரு பூங்கா (7.40 கி.மீ. நீளம்) இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நேற்று முதல் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விழா, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில், தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு, முதலில், திருமங்கலம் நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். அதன் பின்னர், திருமங்கலம் சுரங்க ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் பச்சை கொடி காட்டி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஜப்பான் தூதரக அதிகாரி கென்கோ சோன், ஜப்பான் நாட்டு துணை தூதர் செய்ஜி பாபா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசியதாவது:

ஜெயலலிதாவுக்கு புகழாரம்

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். அனைவரையும் கவரக்கூடிய ஒரு தலைவர். மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர். ஜெயலலிதா இந்த விழாவில் பங்கேற்க, இல்லாதது வருத்தம் அளிக்கிறது. சென்னையில் போக்குவரத்து தேவையை சமாளிக்கும் வகையில் மெட்ரோ சேவையை தொடங்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

ஜெயலலிதா தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டங்களை அறிவித்தாரோ, அந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். மேலும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று உறுதி கூறுகிறேன். புதிய மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த திட்டத்தில் தேவைப்படும் பட்சத்தில் மாற்றங்களை செய்து, ஒப்புதல் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

சென்னையில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. திருமங்கலத்துக்கும், நேரு பூங்காவுக்கும் இடையில் சுரங்க ரெயில் பாதையை தொடங்குவதன் மூலம், முதல் கட்ட திட்டத்தில் 28 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு 2009ம் ஆண்டு ஜனவரியில் மொத்தம் ரூ.14 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்காக மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.3 ஆயிரத்து 770 கோடி ஆகும். 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரெயில் ஒரு முறை பயணிக்கும்போது, 16 பஸ்கள், 300 கார்கள் மற்றும் 600 இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மெட்ரோ ரெயில் சேவையின் முதல் கட்டம் நிறைவேற்றப்படும்போது, நாள் ஒன்றுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரையிலும் ரூ.11 ஆயிரத்து 301 கோடியை அளித்துள்ளது.

புதிதாக வழித்தடம்

டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 341 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும் டெல்லி, தேசிய தலைநகர் பிராந்தியம், கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், மும்பை, கொச்சி, அகமதாபாத், நாக்பூர், லக்னோ, புனே ஆகிய நகரங்களில் 529 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 522 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்தினை மேம்படுத்துவற்கு வெவ்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை இணைப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மெட்ரோ ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பல்வகை போக்குவரத்து சேவை அமைக்கப்பட வேண்டும்.

மெட்ரோ ரெயில் கொள்கை

அரசு போக்குவரத்து சேவைகள் அதிகரித்து, தனியார் வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில் வாகன நிறுத்தம் மற்றும் அதற்கான கட்டணம் இருக்க வேண்டும். சைக்கிள்கள் மட்டும் செல்வதற்காக தனிப்பாதைகள், போதிய நடைபாதை வசதியுடன் வழிகாட்டி நெறிகளின்படி வலுவான சாலைகள் அமைக்கப்பட வேண்டும். பஸ் சேவைகளை மேம்படுத்த வேண்டும். நகர்ப்புற போக்குவரத்து துறைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்து வருகிறது.

இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிங்கப்பூர், சியோல், ஹாங்காங், துபாய் ஆகிய இடங்களில் மேல் பயிற்சி பெற்றனர். புதிய மெட்ரோ ரெயில் கொள்கையை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன்படி நிலமதிப்பீட்டு நிதிய முறை, நிதி முதலீடு மற்றும் போக்குவரத்து சார்ந்த மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படும்.

தமிழகத்தின் பங்களிப்பு

மத்திய அரசு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முடியாது. அந்த வகையில், தமிழகத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்காக தமிழகம் மட்டும் இன்றி, அனைத்து மாநிலங்களும் மத்திய அரசோடு இணைந்து செயல்பட வேண்டும். அ.தி.மு.க., காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள்..

இதுவரை, பரங்கிமலை முதல் கோயம்பேடு வரை உயர்மட்டப்பாதையில் ஓடிய மெட்ரோ ரெயில், இனி கோயம்பேட்டில் இருந்து சாய்தள பாதையில் இறங்கி, திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலும் பயணிக்கிறது. அதாவது, பரங்கிமலை முதல் நேரு பூங்கா வரை 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

இந்த 2வது வழித்தடத்தில் இன்னும் எழும்பூர், சென்டிரல் ஆகிய சுரங்க ரெயில் நிலையங்களே மீதம் இருக்கின்றன. அங்கும் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் 2வது வழித்தடத்தில் முழுமையாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்